top of page

சென்னை குயர் இலக்கிய விழா 2021 லைவ்

குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸின் குயர் இலக்கியவிழா 2021 பற்றிய அறிவிப்பினை வெளியிடுவதில் நாங்கள் மிக்கமகிழ்ச்சியடைகிறோம். நான்காவது வருடமாக நடைபெற இருக்கும் இந்த இலக்கியவிழா செப்டம்பர் 18-ம் தேதி முதல் 24-ம்தேதி வரை நடைபெறும். பெரும்பாலும் மற்றவர்களால் பேசப்படாத பால்புதுமையினரின் (LGBTQIA+) இலக்கியத்தையும்வரலாற்றையும் முன்னிலைப்படுத்துவதே இவ்விழாவின் நோக்கம்.

 

முதல் இரண்டு இலக்கிய விழாக்களும் சென்னையிலுள்ள கவிக்கோ மன்றத்தில் முழுநாள் விழாவாக நடத்தப்பட்டன. கோவிட்-19 பெருந்தொற்றின் முதல் அலை காரணமாக 2020-ம் ஆண்டின் இலக்கியவிழாவை இணையவழி நடத்தினோம். இரண்டாம் அலை நம் நண்பர்களிடமும், சமுதாயத்திடமும் இருந்து நம்மை இன்னமும் தனிமைப்படுத்தி விட்டது. நமதுபாதுகாப்பான இடங்கள், சமூக வட்டங்கள், நிகழ்வுகள் எல்லாமே சுருங்கிவிட்டன.

 

பால்புதுமையினர் சமுதாய மக்கள் நேரடியாக சந்தித்து பால்புது சுயமரியாதை நிகழ்வுகளில் பங்கேற்று ஒரு வருடத்துக்கு மேல்ஆகிவிட்டது. ஆனாலும் எல்லாம் இன்னமும் முழுதாக இருண்டு விடவில்லை. பால்புதுமையினர் சமுதாயத்துக்குநீண்டகாலமாக கிடைக்காமல் இருந்த பிரதிநிதித்துவம் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்கொள்கைக்குழு உறுப்பினராக கலைமாமணி முனைவர் பத்மஶ்ரீ நர்த்தகி நடராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதுபால்புதுமையினர் மக்களுக்கு பெரிய நம்பிக்கையை அளித்திருக்கிறது. இந்த வருட இலக்கியவிழாவினை முனைவர் நர்த்தகிநடராஜ் சிறப்புரையாற்றித் தொடங்கி வைக்கிறார்.

 

எல்லா சமுதாய மக்களுக்கும், குறிப்பாக வரலாற்றுரீதியாக விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கும் செவிவழி வரலாறுஎன்பது தவிர்க்க முடியாத ஒன்று. எழுதப்பட்ட இலக்கியங்களோடு வாய்வழியாக சொல்லப்படும் வரலாற்றின்முக்கியத்துவத்தையும் இவ்வருட இலக்கிய விழாவில் கருத்தில் கொண்டுள்ளோம். எனவே இந்திய மற்றும் புலம்பெயர் தமிழ்திருநங்கைகளின் வரலாற்றைப் பற்றிய அமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறோம். எழுத்தாளர் மற்றும் vlogger தனுஜாசிங்கம் நடத்தும் இந்த அமர்வில் எழுத்தாளரும் அரங்கக்கலைஞருமான ஆ ரேவதி மற்றும் மலேசியாவில் இருந்துபுலம்பெயர்ந்து தற்போது ஜெர்மனியில் வசிக்கும் சூர்யானி மம்மூத் கலந்துகொள்கின்றனர். கதைசொல்லல் பற்றிஉரையாடுவதே இந்த அமர்வின் நோக்கம். எழுத்தாளரும், நடிகருமான ஷோபா சக்தியுடன் அரங்கக் கலைஞர் லிவிங் ஸ்மைல்வித்யா தமிழ் இலக்கியத்திலும் ஷோபாசக்தியின் கதைகளிலும் பால்புதுமையினர் எனும் தலைப்பில் உரையாடுகிறார். எழுத்தாளர் சிந்து ராஜசேகரன் மற்றும் சுயாதீன திரைப்பட இயக்குனர் திவ்யா பாரதி பங்குகொள்ளும் அமர்வில் தங்கள்கதைசொல்லும் வடிவத்தில் பாலினம் மற்றும் பாலீர்ப்பு எனும் தலைப்பில் உரையாற்றுகின்றனர்.

 

சமீபத்தில் வெளியான சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பால்புதுமையினருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கின்றன. பால்புதுமையினர் பற்றிய புரிதலின்றி செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்வரவேற்கத்தக்க ஒன்று. 2018-ம் ஆண்டு நடந்த குயர் இலக்கியவிழாவில் ஊடகங்களின் பங்களிப்பைப் பற்றிய அமர்வு ஒன்றினைநடத்தினோம். நமது வாழ்க்கையிலும் பிரச்சினைகளிலும் ஊடகங்கள் முக்கியமாக பங்கினை வகிக்கும் நிலையில் இந்தஉரையாடல்கள் தொடர்ந்து நடைபெற வேண்டியது மிகவும் அவசியம். இதன் அடுத்தகட்ட நகர்வாக செய்திகளைவெளியிடுவதில் ஊடகங்கள் கடைபிடிக்க வேண்டிய சிறந்த நெறிமுறைகள் குறித்து உரையாட இருக்கிறோம். இந்த நிகழ்வில் தி நியூஸ் மினிட்டில் இருந்து ராகமாலிகா கார்த்திகேயனும், தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து ரஞ்சிதா குணசேகரனும் உரையாற்றுகின்றனர்.

 

எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும், அந்த சமுதாய மக்கள் ஒன்றிணைவதற்கு அவர்களுக்கான சமூக மற்றும் தனிப்பட்டஇடங்கள் மிகவும் அவசியம். பெருந்தொற்று காலத்தில் நேரடியாக சந்திப்பதற்கான வாய்ப்புகள் சுருங்கி விட்ட போதும், கண்டங்களைக் கடந்தும் நாம் இணைந்திருப்பதற்கான வாய்ப்புகளை புதுமையான தொழில்நுட்பங்கள் உருவாக்கித்தந்திருக்கின்றன. பெருந்தொற்று காலத்தில் நமது பாதுகாப்பான இடங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது என்பது குறித்தும்உரையாட இருக்கிறோம். பால்புதுமையினரின் வார்த்தை பயன்பாடுகள் மற்றும் ரசிகப்புனைவுகள் குறித்த உரையாடல்களும்இவ்வருட நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

 

“ஓங்கி ஒலிக்கும் குரல்கள்” என்பதே இவ்வருட இலக்கிய விழாவின் பேசுபொருள். கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடநிகழும் இணையவழி நடத்தப்படும். பெருந்தொற்றுக் காலம் தொடங்கியது முதல் இணையவழி சந்திப்புகளை நடத்தி நாம்அனைவருமே சோர்வடைந்து இருக்கிறோம். பரிசோதனை முயற்சிகள் செய்வதில் ஆர்வம் இருப்பதால் இந்த வருடநிகழ்வுகளைக் காணொளி வழியே நடத்தாமல் ஒலிவடிவத்தில் மட்டுமே நடத்த இருக்கிறோம். கவனம் முழுக்க பின்வாங்கமறுக்கும், மற்றவர்களால் கேட்கப்படாத நமது குரல்களிலேயே இருக்கும். அதேநேரத்தில் ஒலிவடிவத்தில் நடைபெறும்அமர்வுகளை காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களால் கேட்கமுடியாது என்பதையும் நாங்கள்உணர்ந்திருக்கிறோம். Twitter spaces-ல் ஆங்கிலத்தில் நடக்கும் உரையாடல்கள் எழுத்துவடிவத்திலும் கிடைக்கிறது. இந்தவசதி தமிழில் நடக்கும் உரையாடல்களுக்கும் Twitter-ஆல் விரிவுபடுத்தப்படும் என நம்புகிறோம்.

 

நான்காவது வருட குயர் இலக்கியவிழா 2021 Live Twitter #தமிழ்spaces-ல் செப்டம்பர் 18 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும். நிகழ்வு நடைபெறும் நேரம், பேச்சாளர்களின் முழுவிவரங்கள் மற்றும் பிற தகவல்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

bottom of page